முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்டு


முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்டு
x

காசோலை மோசடி வழக்கில் ஆஜராகாத அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு கரூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது

கரூர்
கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு அம்பாள் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரிடம், கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. செ.காமராஜ் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி தொழில் நிமித்தமாக வட்டிக்கு ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த கடன் தொகையையும், அதற்கான வட்டியையும் காமராஜ் செலுத்தாமல் இருந்துள்ளார். 
இதுகுறித்து ராமச்சந்திரன் அவரிடம் கேட்டதற்கு, 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி ரூ.10 லட்சத்திற்கான காசோலையை காமராஜ் வழங்கியுள்ளார். ராமச்சந்திரன் அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாததால் திரும்பியது. 
பிடிவாரண்டு
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமச்சந்திரன், காமராஜ் மீது கரூர் விரைவு கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு காமராஜுக்கு பலமுறை கோர்ட்டு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிபதி சரவணபாபு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் கோர்ட்டில் காமராஜ் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 இவர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்ததோடு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் கட்சி பதவி வகித்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவருக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.விற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story