காளியம்மன் கோவில் தேரோட்டம்
கள்ளை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள கள்ளை கிராமத்தில் உள்ள காளியம்மன், பகவதி அம்மன், கருப்பசாமி ஆகிய கோவில்களில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி முதல்நாள் காளியம்மனுக்கு பூ போடும் நிகழ்ச்சி, கரகம் பாலித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து கருப்பசாமிக்கு குட்டி குடித்தல் நிகழ்ச்சி, பொங்கல் வைத்தல், மாவிளக்கு போடுதல், மொட்டை அடித்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. அப்போது தாரை-தப்பட்டை முழங்கவும், வாண வேடிக்கையுடனும் கருப்பசாமி குதிரை வாகனத்தில் முன்செல்ல, பகவதி அம்மன் முத்துப் பல்லக்கிலும், பெரிய தேரில் காளியம்மனும் எழுந்தருளி வீதி உலா சென்றனர்.
பக்தர்கள் வடம் பிடித்தனர்
தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேர் சென்ற வீதிகளில் பக்தர்கள் மாலை கொடுத்தும், தேங்காய், பழம் படைத்தும் கருப்பசாமி, பகவதி அம்மன், காளியம்மன் ஆகிய தெய்வங்களை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பின்னர், தேர் நிலையை அடைந்ததும் அங்கு தயார் நிலையில் நேர்த்திக் கடனுக்காக வைக்கப்பட்டு இருந்த எருமைக்கிடாக்களை வெட்டி காளியம்மனுக்கு பலி கொடுத்தனர்.
அதன்பிறகு மஞ்சள் நீராடுதல், கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கள்ளை, மணியக்கவுண்டம்பட்டி, கொக்காகவுண்டம்பட்டி, சின்ன கவுண்டம்பட்டி, பூவாயிரம், மங்காம்பட்டி, சுக்காம்பட்டி, குழந்தைபட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர். திருவிழாவில் திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story