வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டையில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புதிதாக நூதன தேர் செய்யப்பட்டுள்ளது. அதற்கான வெள்ளோட்ட நிகழ்ச்சி இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் தொடங்கி நடைபெற உள்ளது. திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியை விமரிசையாக கொண்டாட வேண்டி வரதராஜ பெருமாள்-பெருந்தேவி தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதற்காக வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள்-பெருந்தேவி தாயார் ராஜ அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி சேவை சாதித்தனர்.
திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் பெருந்தேவி தாயாருக்கும், வரதராஜ பெருமாளுக்கும் சீர்வரிசை எடுத்து வந்தனர். மனிதர்களுக்கு திருமணம் நடைபெறுவது போன்று ஒவ்வொரு சடங்காக செய்யப்பட்டு மணமேடையில் பெருந்தேவி தாயாருக்கு வரதராஜ பெருமாள் திருக்கரங்களில் இருந்து மாங்கல்யத்தை பெற்று தவில், நாதஸ்வர மங்கல இசை முழங்க கோவில் அர்ச்சகர் மாங்கல்ய தாரணம் செய்து வைத்தார். பின்னர் தாயார் மற்றும் பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி சேவை சாதித்தனர். மங்கள ஆரத்தி உள்பட பல்வேறு உபசாரங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து மகா தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story