பழங்கால கல்வெட்டு கண்டெடுப்பு
திருமங்கலம் அருகே பழங்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே பழங்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
கள ஆய்வு
மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை சார்பில் மதுரை நாயக்கர் மன்னர்களின் ஆட்சியின் கீழ் நிறுவப்பட்ட சத்திரங்கள் பற்றி பேராசிரியர் சிந்து மற்றும் மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக துறைத்தலைவர் மற்றும் ஆய்வாளர்கள் மதுரை மாவட்டம் மருதங்குடி அருகே நாயக்கர் கால சத்திரங்களை பற்றி கள ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பழங்கால கல்வெட்டு ஒன்று இருப்பதை கண்டெடுத்தனர். அக்கிராமத்தின் சந்தோசமணி என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சோமிகுளம் கண்மாய் கரையில் இருந்த கல்வெட்டை பாண்டியநாடு பண்பாட்டு மைய உதவியோடு கல்வெட்டு கண்டெடுத்தனர்.
கல்வெட்டு
இதுகுறித்து வரலாற்றுத்துறை பேராசிரியர் சிந்து கூறியதாவது,
பாண்டிய நாட்டுப்பகுதியில் நாயக்கர் காலத்தில் உள்ள சத்திரங்களை ஆய்வு செய்து கொண்டு வருகிறோம். இந்த ஆய்வில் மாணவ-மாணவிகள் ஐஸ்வர்யா, விக்னேஸ்வரன், சிவமாலினி, தேவி, பிரியதர்ஷன் ஆகியோருடன் மருதங்குடியில் கள ஆய்வு செய்தோம். பாண்டியர் காலத்தில் இப்பகுதியை வீரநாராயண வளநாடுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. இந்த கிராமத்தில் சோமிகுளம் கண்மாய் அருகில் நாயக்கர்கால கல்வெட்டு ஒன்றை நாங்கள் ஆய்வு செய்தோம்.
இந்த கல்வெட்டு 4 அடி உயரமும், 1 அடி அகலமும் இருபுறமும் இருபத்தி நான்கு வரிகளை கொண்டதாகும் இருந்தது. இந்த கல்வெட்டில் இந்த ஊரின் பெயரும், சோமிகுளம் கண்மாய் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் இந்த கல்வெட்டில் சோமிகுளம் கண்மாய் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயம் அதிகமாக நடை வரும் காலத்தில் நன்செய் வரி, மழைப்பொழிவு குறைந்து வறண்ட காலத்தில் புன்செய் வரி என ஒரே நிலத்திற்கு இரு வகையான வரிகள் இப்பகுதியில் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. இது நாயக்கர் அரசுக்கு வரி வசூலிப்பவர் மூலம் செலுத்தப்பட்டுள்ளது என்ற ஒரு தகவல் கொண்ட கல்வெட்டு கிடைத்துள்ளது. மேலும் இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு, மாதம், நாள் குறித்த தகவல்கள் உள்ளன. இந்த கல்வெட்டின் எழுத்து அமைப்பை பார்க்கும்போது, இந்த கல்வெட்டு நாயக்கர் காலத்தை சேர்ந்தது எனவும், 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு எனவும் கருதலாம் என்றார்.
Related Tags :
Next Story