காத்தாயி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
காத்தாயி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 7-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று காலை வரை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் பூங்கரகம், அக்னி கரகம் ஏந்தி வர வீதி உலா நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணி முதல் தீ மிதிக்கும் பக்தர்களுக்கு கங்கணம் கட்டப்பட்டு, காலை 6 மணியளவில் தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு தேவாமங்கலம் - அணைக்குடம் இடையே காட்டுப்பகுதியில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டு வந்தனர். காலை சூரிய உதயத்தின்போது பூங்கரகம் மற்றும் அக்னி கரகம் ஏந்தி வந்தவர்கள் முதலில் அக்னி குண்டத்தில் இறங்கி அம்மனை நோக்கி நடந்து வந்தனர். பின்னர் பக்தர்கள் ஒவ்வொருவராக அக்னி குண்டத்தில் இறங்கி அம்மனை நோக்கி நடந்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் 128 பேர் அக்னி குண்டம் இறங்கி தீ மிதித்தனர். தீ மிதித்து திரும்பிய பக்தர்களுக்கு பானகம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. பின்னர் காத்தாயி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடுகளை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story