நெல்லை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி கட்டிட தொழிலாளி சாவு
நெல்லை அருகே கல்குவாரி குட்டையில் மீன் பிடித்தபோது தண்ணீரில் மூழ்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
நெல்லை, மார்ச்.23-
நெல்லை அருகே கல்குவாரி குட்டையில் மீன் பிடித்தபோது தண்ணீரில் மூழ்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கட்டிட தொழிலாளி
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் காட்வின் ஏபெல் (வயது 58). கட்டிட தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை அருகே வி.எம். சத்திரத்தில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் நெல்லை ஆச்சிமடம் அருகே உள்ள கல்குவாரி குட்டை பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த தண்ணீரில் மீன்கள் அதிகமாக காணப்பட்டு உள்ளன. உடனே காட்வின் ஏபெல் தனது நண்பரை அழைத்து கொண்டு தூத்துக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று மீன் பிடி வலை வாங்கி கொண்டு வந்துள்ளார். பின்னர் அவர் கல்குவாரி குட்டையில் இறங்கி வலையை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தார்.
தண்ணீரில் மூழ்கி சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதில் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர் மற்றும் அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீசாருக்கும், பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்வின் ஏபெல்லின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் இரவு வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தீயணைப்பு துறையினர் தேடும் பணியை கைவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை காட்வின் ஏபெல் தண்ணீரில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவலறிந்த சிவந்திபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story