மாற்றுத்திறனாளிகள் 40 பேர் கைது


மாற்றுத்திறனாளிகள் 40 பேர் கைது
x
தினத்தந்தி 23 March 2022 2:23 AM IST (Updated: 23 March 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேற முயன்ற மாற்றுத்திறனாளிகள் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணம்;
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேற முயன்ற மாற்றுத்திறனாளிகள் 40 பேர் கைது செய்யப்பட்டனர். 
உதவித்தொகை
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கி வரும் உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி கடந்த பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக புதுச்சேரி மாநிலத்தில் ரூ.3 ஆயிரத்து 800, ஆந்திராவில் ரூ. 3 ஆயிரத்து 100 வழங்கப்பட்டு வருகிறது. 
இதைப்போல தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக  மாற்றுத்திறனாளிகள் அறிவித்திருந்தனர்.
பேச்சுவார்த்தை
இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள கும்பகோணம் பஸ் நிலையத்திலிருந்து 22 மாற்றுத்திறனாளிகள் நேற்று முன்தினம் இரவு சென்னை செல்ல இருந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கும்பகோணம் பஸ் நிலைய பகுதிக்கு வந்து அங்கு திரண்டிருந்த மாற்றுத்திறனாளிகளிடம் சுமார் ½ மணி நேரம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 
கைது
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட துணை தலைவர் சுகுமார் தலைமையில் 22 மாற்றுத்திறனாளிகளும் கும்பகோணம் பஸ் நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனால் பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளை கும்பகோணம் கோட்டாட்சியர் லதா நேற்று அதிகாலை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
உடன்பாடு ஏற்படவில்லை
இது குறித்து தகவல் அறிந்த மேலும் சில மாற்றுத்திறனாளிகள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேற முயன்றனர். 
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட முயற்சி செய்த 40 மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர். இதனால் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக பகுதியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

Next Story