மேகதாது திட்டத்தை 2 கட்டமாக செயல்படுத்த தேவேகவுடா ஆலோசனை-குமாரசாமி பேச்சு


மேகதாது திட்டத்தை 2 கட்டமாக செயல்படுத்த  தேவேகவுடா ஆலோசனை-குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 23 March 2022 2:29 AM IST (Updated: 23 March 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது திட்டத்தை 2 கட்டமாக செயல்படுத்த தேவேகவுடா ஆலோசனை கூறியுள்ளதாக சட்டசபையில் குமாரசாமி கூறியுள்ளார்

பெங்களூரு: மேகதாது திட்டத்தை 2 கட்டமாக செயல்படுத்த தேவேகவுடா ஆலோசனை கூறியுள்ளதாக சட்டசபையில் குமாரசாமி கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபையில் நேற்று மேகதாது குறித்த விவாதத்தில் முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) குழு தலைவருமான குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

ஆட்சேபனை இல்லை

மேகதாது திட்டத்தை அமல்படுத்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உடனடியாக டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்த பிறகு பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு நீர் ஒதுக்குமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றோம். அதன்படி பெங்களூருவுக்கு நீர் கிடைத்தது.
மேட்டூர் அணையின் மேல் பகுதியில் அதாவது கர்நாடகத்தின் பகுதியில் அணை கட்டினால் அதற்கு தங்களின் ஆட்சேபனை இல்லை என்று கோர்ட்டில் தமிழக அரசின் வக்கீல் கூறியுள்ளார். 

முன்னாள் பிரதமர் தேவேகவுடா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதி, மேகதாது திட்டத்தை 2 கட்டமாக செயல்படுத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார். இது சரியான ஆலோசனை.

சுற்றுச்சூழல் அனுமதி

மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியே தேவை தவிர தமிழக அரசின் ஒப்புதல் அல்ல. எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டது. அதற்கு அந்த மாநில முதல்-அமைச்சர், பெங்களூரு குடிநீர் தேவைக்கு 4.5 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) ஒதுக்கீடு செய்திருக்கும்போது, 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை எதற்காக கட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன் மூலம் மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று நான் கருதுகிறேன். மேகதாது திட்ட விஷயத்தில் காலவிரயம் செய்யாமல் விரைந்து செயல்பட்டு மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Next Story