ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
நாடார் மகாஜன சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்து தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை
நாடார் மகாஜன சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்து தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தீர்மானம்
சென்னையில் கடந்த 19-ந் தேதி ஒருங்கிணைந்த நாடார்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ள நாடார் மகாஜன சங்க தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் 22-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. அதன்படி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இந்திய நாடார் கூட்டமைப்பு துணை தலைவர் ராஜகுமார் வரவேற்றுப் பேசினார். நாடார் மகாஜன சங்க முன்னாள் துணை தலைவர் முத்துசாமி நாடார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், நாடார் பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன், கோவை நாடார் சங்க தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன், நாடார் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் பெரீஸ் மகேந்திரவேல், சிம்மக்கல் நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் ஆர்.வி.டி.ராமையா, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி முன்னாள் பொருளாளர் ஈரோடு மாரியப்பன், மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் வி.பி.மணி, நாடார் பேரவை பொருளாளர் வக்கீல் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோஷம்
ஆர்ப்பாட்டத்தின் போது நாடார் மகாஜன சங்கம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் நிதி முறைகேடு மற்றும் மோசடி நடக்கிறது. சட்டத்திற்கு புறம்பாக சங்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, சங்க சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்துடன், சட்டவிரோதமாக தன்னை பொதுச்செயலாளர் என்று கூறும் கரிக்கோல்ராஜின் சதியை முறியடிக்க வேண்டும் என்றும், நாடார் மகாஜன சங்கம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களை பாதுகாக்கவும், மதுரை தெற்கு மாவட்ட பதிவாளர் (சங்கங்கள்) உத்தரவை மீறி செயல்படுவதை கண்டிப்பதாகவும் கூறி கோஷம் எழுப்பப்பட்டன.
மேலும் பதவி காலம் முடிந்தபின்பும், அறிவித்துள்ள சட்டவிரோதமான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் சட்டப்படி உறுப்பினர்களை சரிபார்த்து கடந்த கால கணக்குகளை சரி பார்த்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர்.
கலெக்டரிடம் மனு
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மதுரை கலெக்டர் அனிஷ் சேகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை நாடார் மகாஜன சங்கத்தின் நிர்வாகிகளின் பதவி காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே சட்டப்படி மதுரை நாடார் மகாஜன சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியில் தொடர முடியாது. மேலும் அவர்கள் மீது புகார்களும் நிலுவையில் உள்ளன. இந்த சூழ்நிலையில், சட்டத்திற்கு புறம்பாக மகாஜன சங்க ஆயுட்கால உறுப்பினர்கள் ரூ.100 செலுத்திய பின்னர்தான் வாக்களிக்க முடியும் என்று கூறி பண வசூல் செய்து வருகின்றனர். நாடார் மகாஜன சங்கத்தில் 60 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், மதுரையில் ஒரே இடத்தில் வைத்து, ஒரே நபர் எப்படி 165 நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க முடியும். சங்கத்தில் இருந்து வெளிவரும் மகாஜனம் இதழை ஆயுள் கால சந்தா உறுப்பினர்களுக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.
கல்லூரி கட்டணம்
ஒவ்வொரு ஆண்டும் கல்வித் திருவிழா என்ற பெயரில் விழா நடத்தி அதன்பேரில் வசூலிக்கப்படும் பணத்திற்கு கணக்கு காட்டுவதில்லை. அருப்புக்கோட்டையில் விவசாய பண்ணை மற்றும் ஆட்டுப்பண்ணை, நாமக்கல்லில் கோழிப்பண்ணை ஆகியவை அமைப்பதாக கூறி ஒரு பெரும் தொகையை வசூல் செய்து அந்த திட்டத்தை தொடர்ந்து நடத்தவில்லை. சங்கத்தின் முக்கிய நோக்கமான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.
மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் அரசு நிர்ணயித்த ரூ.700 மட்டுமே கட்டணமாக வாங்க வேண்டும். ஆனால் விதியை மீறி ரூ.3 ஆயிரத்து 500 வாங்குகிறார்கள். இதுதொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு, அரசின் விசாரணையில் உள்ளது. இந்த முறைகேட்டால் அரசே கல்லூரியை ஏற்று நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. சங்கத்தின் பெயரை கூறி மகளிர் மேம்பாட்டு மையம் என்ற பெயரில் ஏழை பெண்களிடம் வசூலித்த தொகைக்கு கணக்கு காட்டவில்லை.
தேர்தல் அறிவிப்பு
மதுரை தெற்கு மாவட்ட பதிவாளரின் (சங்கங்கள்) உத்தரவை மீறி அடுத்த மாதம் (ஏப்ரல்) 24-ந் தேதி நடைபெறுவதாக அறிவித்துள்ள சங்கத்தின் தேர்தல் தொடர்பான அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தனி அதிகாரியை நியமித்து, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அனிஷ்சேகர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story