மாணவர் உள்பட 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி
குளிக்க சென்ற போது மாணவர் உள்பட 2 பேர் ஆற்றில் மூழ்கி பலியானார்கள்
சிவமொக்கா: சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே அரளசுரளி பகுதியை சேர்ந்தவர் வரதன் (வயது 19). இவர் தீர்த்தஹள்ளி துங்கா கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வரதனும், அவரது நண்பரான சொனாலே பகுதியை சேர்ந்த மஞ்சு (20) என்பவரும் துங்கா ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். இருவருக்கும் நீச்சல் தெரியாது.
ஆனால் ஆர்வக்கோளாறில் இருவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது நீரில் மூழ்கி இருவரும் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் இருவரும் நீரில் மூழ்கி பலியானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்து வந்ததும் தீர்த்தஹள்ளி போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 2 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக தீர்த்தஹள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக தீர்த்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மஞ்சு எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story