வண்ண விளக்குகளால் ஒளிரும் சோழன்சிலை ரவுண்டானா


வண்ண விளக்குகளால் ஒளிரும் சோழன்சிலை ரவுண்டானா
x
தினத்தந்தி 23 March 2022 2:55 AM IST (Updated: 23 March 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் கண்ணைக்கவரும் வகையில் வண்ண, வண்ண விளக்குகளால் இரவு நேரத்தில் சோழன்சிலை ரவுண்டானா ஒளிருகிறது. இதனை பார்த்து சுற்றுலா பயணிகள் வியந்து வருகிறார்கள்.

தஞ்சாவூர்;
தஞ்சையில் கண்ணைக்கவரும் வகையில் வண்ண, வண்ண விளக்குகளால் இரவு நேரத்தில் சோழன்சிலை ரவுண்டானா ஒளிருகிறது. இதனை பார்த்து சுற்றுலா பயணிகள் வியந்து வருகிறார்கள்.
தஞ்சை மாநகராட்சி
தஞ்சை நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக 2014-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு, அகழி மேம்பாடு, பஸ் நிலையம் சீரமைப்பு, மின் விளக்கு வசதி, குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தஞ்சையில் உள்ள பல்வேறு பூங்காக்களும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இது தவிர தனியார் பங்களிப்புடனும் பல்வேறு பூங்காவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளின் சந்திப்பில் உள்ள ரவுண்டானாவுக்களும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
சோழன்சிலை ரவுண்டானா
தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள சோழன்சிலை எதிர்புறம் சிக்னல் உள்ளது. இந்த சிக்னல் பகுதியில் ரவுண்டானா உள்ளது. இந்த ரவுண்டானா புதர்கள் நிறைந்து காணப்பட்டது. இதையடுத்து இந்த ரவுண்டானா அழகுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ரவுண்டானா முழுவதும் சரி செய்யப்பட்டு அதில் புல்தரைகள் பதிக்கப்பட்டன. மேலும் அலங்காரத்திற்காக வைக்கப்படும் சிறிய, சிறிய மரங்களும், செடிகளும் நடப்பட்டு தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகின்றன. மேலும் இந்த சிறிய, சிறிய மரங்களின் அருகே வண்ண, வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
வண்ண விளக்குகளால் ஒளிர்கின்றன
இதனால் இரவு நேரங்களில் மரங்களில் பச்சை, மஞ்சள், சிகப்பு, நீல நிறம் உள்ளிட்ட பல்வேறு வண்ண விளக்குகள் ஒளி படும் வகையில் உள்ளது. இதனால் மரங்கள் பல்வேறு வண்ணங்களில் ஒளிருகின்றன. இது காண்போரை ஈர்க்கும் வகையில் காணப்படுகிறது.
தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வியப்பு
இவர்கள் பெரும்பாலும் சோழன்சிலை வழியாகத்தான் சென்று வர வேண்டும். மேலும் தஞ்சை மாநகரம் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த நிலையில் சுற்றுலா வரும் பொதுமக்களின் கண்ணைக்கவரும் வகையில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளிர்வதை வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

Next Story