விஜயாப்புராவில் மீண்டும் நிலநடுக்கம்;ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது


விஜயாப்புராவில் மீண்டும் நிலநடுக்கம்;ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது
x
தினத்தந்தி 23 March 2022 3:07 AM IST (Updated: 23 March 2022 3:07 AM IST)
t-max-icont-min-icon

விஜயாப்புராவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது

பெங்களூரு: கர்நாடகத்தில் விஜயாப்புரா, கலபுரகியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். அண்டை மாநிலமான மராட்டியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக விஜயாப்புரா, கலபுரகியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வடகர்நாடக மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நிலநடுக்கம் ஏற்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  அதாவது, விஜயாப்புரா டவுன் மற்றும் விஜயாப்புரா புறநகர் பகுதிகளான அலியாபாத், நிங்கனா, பரதகி, கூகாடி ஆகிய கிராமங்களில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. 

சரியாக காலை 11.22 மணியில் இருந்து சுமார் 3 நிமிடங்களுக்கு இந்த நிலநடுக்கம் உண்டானது. அப்போது வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்து உருண்டோடின. வீடுகளும் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் அலறி அடித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தனர். தெருக்களில் நின்று கொண்டு தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இந்த நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில் பதிவாகி இருப்பதாக கர்நாடக இயற்கை பேரிடர் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். 

Next Story