ஈரோட்டில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்


ஈரோட்டில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 March 2022 3:20 AM IST (Updated: 23 March 2022 3:20 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

ஈரோடு
ஈரோட்டில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
உலக தண்ணீர் தினம்
உலக தண்ணீர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் என்.முரளி தலைமை தாங்கினார். நிர்வாக பொறியாளர்கள் ஆர்.பொன்னுசாமி, டி.எஸ்.லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் தியாகி குமரன் சாலை வழியாக சென்று சம்பத்நகரில் நிறைவடைந்தது. இதில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக நடந்து சென்றனர். அப்போது அவர்கள் “விண்ணின் மழைத்துளி, மண்ணின் உயிர்த்துளி”, “மழைநீர் நமது உயிர் நீர்”, “மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்”, “மழைநீரை சேகரிப்போம்” உள்ளிட்ட தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லி.மதுபாலன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி மேற்பார்வை பொறியாளர் கே.ஜி.சுதாமகேஷ், உதவி நிர்வாக பொறியாளர் எம்.மாதேஸ்வரன் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மரக்கன்று நடும் விழா
ஈரோடு மாநகராட்சி சார்பில் உலக தண்ணீர் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா ஈரோடு வாய்க்கால்மேடு பசுமை பாரதிநகர் பகுதியில் நேற்று நடந்தது. 
விழாவுக்கு மாநகராட்சி மேயர்   நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் கரையோரமாக சுமார் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி பகுதியில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழாவில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், செயற்பொறியாளர் விஜயகுமார்,  நகர்நல அதிகாரி டாக்டர் பிரகாஷ், உதவி செயற்பொறியாளர் சண்முகவடிவு, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெகதீசன், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதிய இணையதளம்
உலக தண்ணீர் தினத்தையொட்டி ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் “ஈரம் ஈரோடு” என்ற புதிய இணையதளம் தொடக்க விழா ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. 
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி புதிய இணையதளத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஈரம் ஈரோடு என்ற இணையதளம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகள், நீர்சேகரிப்பு கட்டமைப்புகள், தடுப்பணைகள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றின் விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் குளங்கள் சீரமைப்பு, மரம் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பணைகளின் கட்டுமான பணிகள், கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்துதல், அத்திக்கடவு-அவினாசி திட்டம், பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டம், மொடக்குறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகிய விவரங்களை பொதுமக்கள் http://eeramerode.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்”, என்றார்.

Next Story