கெங்கவல்லி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
கெங்கவல்லி அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் ஊராட்சியில் 7, 8 ஆகிய வார்டுகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பகுதியில் கடந்த 2 மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் பலர் காலிக்குடங்களுடன் நேற்று காலை 11 மணி அளவில் ஆத்தூர்-திருச்சி நெடுஞ்சாலையில் பள்ளக்காடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்த தகவல் அறிந்ததும் கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பகுதி பொதுமக்கள் கூறும் போது, எங்கள் பகுதியில் 2 மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து நாங்கள் ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் நாங்கள் குடிநீருக்காக 3 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே குடிநீருக்காக சாலை மறியலில் ஈடுபட்டோம். மேலும் குடிநீர் சரியாக வரவில்லை என்றால் நாங்கள் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
Related Tags :
Next Story