காணாமல் போன வழக்கில் திருப்பம்: ரிக் வண்டி உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரத்துக்கு மாணவன் விற்பனை-கர்நாடகா சென்று அதிரடியாக மீட்ட போலீசார்


காணாமல் போன வழக்கில் திருப்பம்: ரிக் வண்டி உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரத்துக்கு மாணவன் விற்பனை-கர்நாடகா சென்று அதிரடியாக மீட்ட போலீசார்
x
தினத்தந்தி 23 March 2022 5:14 AM IST (Updated: 23 March 2022 5:14 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே காணாமல் போன பள்ளி மாணவன் கர்நாடகாவில் மீட்கப்பட்டான். அந்த மாணவன் திருச்செங்கோட்டை சேர்ந்த ரிக் வண்டி உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

தலைவாசல்:
தலைவாசல் அருகே காணாமல் போன பள்ளி மாணவன் கர்நாடகாவில் மீட்கப்பட்டான். அந்த மாணவன் திருச்செங்கோட்டை சேர்ந்த ரிக் வண்டி உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா மண்மலை கிராமத்தை. சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுடைய மகன் சந்தோஷ்பாரதி (வயது 15). வெண்ணிலா இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து சந்தோஷ்பாரதி சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் உள்ள தனது பாட்டி கருப்பாயி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவன் சந்தோஷ்பாரதி வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ரிக் வண்டியில் வேலை
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து காணாமல் போன பள்ளி மாணவன் சந்தோஷ் பாரதி தலைவாசல் பகுதியில் உள்ள தனது நண்பனுக்கு தான் இருக்கும் இடத்தை ெசல்போன் மூலம் தெரிவித்துள்ளான். இதைத்தொடர்ந்து வகுப்பு ஆசிரியர் மூலம், தலைவாசல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 
அதன் பேரில் போலீசார் கர்நாடகா மாநிலம் சித்தர்துர்கா பகுதியில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ரிக் வண்டி உரிமையாளர் வாசுதேவன் என்பவரின் ரிக் வண்டியில் மாணவன் சந்தோஷ் பாரதி வேலை செய்து கொண்டிருந்தான். பின்னர் மாணவனை போலீசார் அதிரடியாக மீட்டு அவனது தந்தையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.  
ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை
திருச்செங்கோட்டில் உள்ள கோவிலுக்கு செல்வதற்காக கடந்த 1-ந் தேதி சந்தோஷ்பாரதி தேவியாக்குறிச்சியில் இருந்து பஸ் மூலம் திருச்செங்கோட்டுக்கு சென்றுள்ளான். அங்கு பஸ் நிலையத்தில் தன்னிடம் இருந்த பணத்தை செலவு செய்து விட்டு, தவித்து உள்ளான். மேலும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று தகவலை தெரிவித்து சொந்த ஊருக்கு திரும்பி விடலாம் என நினைத்து இருக்கிறான். அப்போது அவனிடம் ஒரு நபர் நைசாக பேச்சு கொடுத்து அவனை திருச்செங்கோட்டை சேர்ந்த ரிக் வண்டி உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். அதன்பின்னர் அவன் ரிக் வண்டியில் வேலை பார்த்து வந்துள்ளான். இதற்காக கர்நாடகா மாநிலத்துக்கு சென்று இருக்கிறான். அங்கு எப்படியோ போன் மூலம் தனது நண்பனுக்கு தகவல் கொடுக்கவே மீட்கப்பட்டுள்ளான். 
இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவன் கடத்தல், விற்பனை தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
கடத்தல் கும்பல்
திருச்செங்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் அனாதையாக சுற்றித்திரியும் மாணவர்கள், வழி தவறி செல்லும் சிறுவர்களை ஒரு கும்பல் கடத்திச்சென்று விற்று ரிக் வண்டிக்கு அனுப்பி வைக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சிறுவர்களை கடத்தும் கும்பலை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

Next Story