மாவட்டத்தில் விடிய, விடிய மழை:சேலத்தில் 36 மி.மீ. மழை பதிவு
சேலம் மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. சேலத்தில் 36 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். நேற்றுமுன்தினம் மதியமும் வெயில் கொளுத்தியது.
இந்த நிலையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 11.45 மணி அளவில் மழை சாரலாக பெய்ய ெதாடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 1.30 மணி வரை இந்த மழை நீடித்தது.
இதனால் கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, 4 ரோடு, சங்கர் நகர், அழகாபுரம், சூரமங்கலம் உள்ளிட்ட மாநகர் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பெரமனூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. மேலும் பல சாலைகளில் சாக்கடை கழிவுநீருடன் மழை நீர் கலந்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டனர். இதே போன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், மேட்டூரில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 36 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ஆத்தூர்-34, ஏற்காடு- 27.8, காடையாம்பட்டி- 13, மேட்டூர்- 9.8, ஓமலூர், ஆனைமடுவு, பெத்தநாயக்கன்பாளையம்- 6, வீரகனூர்-3, தம்மம்பட்டி-2, எடப்பாடி- 1.4.
Related Tags :
Next Story