தொழிலதிபர் வீட்டில் திருடிய வழக்கில் கைதான வாலிபரின் தாய், பாட்டியும் ஜெயிலில் அடைப்பு


தொழிலதிபர் வீட்டில் திருடிய வழக்கில் கைதான வாலிபரின் தாய், பாட்டியும் ஜெயிலில் அடைப்பு
x
தினத்தந்தி 23 March 2022 9:59 AM IST (Updated: 23 March 2022 9:59 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் தொழிலதிபர் வீட்டில் திருடிய வழக்கில் கைதான வாலிபரின் தாய், பாட்டி ஆகியோர் நகை, பணத்தை பதுக்கியதால் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

வேலூர்

வேலூரில் தொழிலதிபர் வீட்டில் திருடிய வழக்கில் கைதான வாலிபரின் தாய், பாட்டி ஆகியோர் நகை, பணத்தை பதுக்கியதால் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

நகை, பணம் திருட்டு

வேலூர் சலவன்பேட்டை பாரதிதாசன் சாலையை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 60), தொழிலதிபர். கடந்த 19-ந் தேதி இரவு தீனதயாளன் குடும்பத்தினருடன் வீட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கினார். அப்போது கீழ்தளத்தில் உள்ள அறையின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தது. 

இதுகுறித்து தீனதயாளன் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சியாமளா வழக்குப்பதிந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், தொழிலதிபர் வீட்டில் திருடியது அதே பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த முரளி மகன் ராகுல்ராபர்ட் (19) என்று தெரிய வந்தது.

தாய், பாட்டி ஜெயிலில் அடைப்பு

அதையடுத்து போலீசார் ராகுல்ராபர்டை கைது செய்து விசாரித்தனர். அதில், தொழிலதிபர் வீடு புகுந்து நகை, பணம், வெள்ளிப்பொருட்களை திருடி, அவற்றை தாய் நிர்மலா (38), பாட்டி ஜெயா (58) ஆகியோரிடம் கொடுத்து வைத்திருப்பதாக ராகுல்ராபர்ட் கூறினார். அதையடுத்து போலீசார் நிர்மலா, ஜெயா ஆகியோரிடம் திருட்டு பொருட்களை ஒப்படைக்கும்படி கூறினர். அதற்கு அவர்கள் ராகுல்ராபர்ட் கீழே விழுந்து கிடந்ததாக 4 கிராம் எடையுள்ள மோதிரம் மட்டுமே தந்தான் என்று கூறி போலீசாரை ஏமாற்ற முயன்றனர். 

அதையடுத்து போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராகுல்ராபர்ட் திருடிய நகை, பணம், வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக இருவரும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அவற்றை மீட்டனர். மேலும் திருட்டு நகை, பணம், வெள்ளிப்பொருட்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அதனை பதுக்கி வைத்து, குற்ற சம்பவத்துக்கு துணை போனதற்காக நிர்மலா, ஜெயா ஆகியோரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். ராகுல்ராபர்ட் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Next Story