காளிகாம்பாள் கோவிலுக்கு ரூ.2½ கோடியில் வெள்ளித்தேர்: ‘இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு பாராட்டு
‘தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை வாழ்த்தி பாராட்டுகிறோம்’ என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை மரகதாம்பாள் சமேத மல்லிகேசுவரர் கோவில் மற்றும் சென்னை காளிகாம்பாள் கமடேசுவரர் தேவஸ்தானம் கோவிலில் புதிய வெள்ளித்தேர் செய்யும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் ஆகியோர் பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்ததுடன், புதிய வெள்ளி திருத்தேர் செய்யும் பணியையும் தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் முன்னிலையில் காளிகாம்பாள் கோவிலில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 11 அடி உயரம் 6 அடி அகலம் கொண்ட புதிய வெள்ளித்தேர் செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 10-க்கும் மேற்பட்ட திட்டங்களை முதல்-அமைச்சர் அடுத்த 2 வாரங்களில் தொடங்கி வைக்க உள்ளார்.
சிதம்பரம் கோவில் தொடர்பான பிரச்சினை குறித்து இணை கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விசாரணை செய்து அறிக்கை அளித்த பின்பு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படாமலும் இறைவனை மகிழ்ச்சியோடு காணுகின்ற சூழ்நிலையை உருவாக்குவது துறையின் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது:-
முதல்-அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் அறநிலையத்துறையின் செயல்திட்டங்கள் அனைத்தையும் உடனுக்குடன் விரைவாக நிறைவேற்றுகிறார்கள். ஏராளமான கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடந்து வருவதுடன், கோவில் விழாக்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள், திருப்பணிகள், கோவில் நிலங்கள் மீட்பு, பக்தர்களுக்கான எல்லா விதமான அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக ஆன்மிக பணிகளை ஆற்றி வருவதை நாங்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்று பாராட்டுகிறோம்.
தொடர்ந்து பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் பேசியதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை புதிதாக தொடங்கி உள்ள கல்லூரிகள் மூலமாக ஆன்மிக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது பாராட்டிற்குரியது. ஆகம விதிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க குழு நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
அறநெறி பாடசாலை தொடங்க முயற்சி எடுத்துள்ள முதல்-அமைச்சருக்கு நன்றி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சென்னை மரகதாம்பாள் சமேத மல்லிகேசுவரர் கோவிலில் இருந்து 500 மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், இணை கமிஷனர் தனபால், கோவில் அறங்காவலர் சர்வேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story