பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி
பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி
ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்திற்கு பேருந்து வசதி, மொபைல் போன் சிக்னல், அமைச்சரின் உதவி என எதுவும் கிடைக்காமல் திருப்பூர் மாவட்டத்திலிருந்து தனி தீவாக ஊத்துக்குளி தாலுகா உள்ளது.
பேருந்து வசதி கிடையாது
ஊத்துக்குளியில் தனி தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டு பல வருடங்களாகியும் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஊத்துக்குளியில் தனி தாலுகா அமைப்பதற்கு முன்பாக இப்பகுதி பொதுமக்கள் தாலுக்கா அலுவலகம் செல்ல பெருந்துறை, அவிநாசி சென்று வந்தனர்.ஏழை எளிய மக்கள் வயதானவர்கள் அவிநாசி, பெருந்துறை செல்ல பல பேருந்துகளை மாறி செல்ல வேண்டி இருப்பதால் அவர்களின் நலன் கருதி ஊத்துக்குளியை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது.புதிய தாலுகா அலுவலகம் ஊத்துக்குளியில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.கொடியம்பாளையம் நால்ரோடு மற்றும் கவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதிக்கு இடையில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதி கிடையாது.செங்கப்பள்ளியிலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்துகள் ஈரோட்டில் இருந்து ஊத்துக்குளி வழியாக திருப்பூர் செல்லும் அரசு பேருந்துகள் தாலுக்கா அலுவலகம் அமைந்திருக்கும் வழியே செல்வது கிடையாது. செங்கப்பள்ளி பகுதியிலிருந்து செல்லும் பேருந்துகள் ஊத்துக்குளி ஊத்துக்குளி ரயில் நிலையம் வழியாக கவுண்டம்பாளையம் நால்ரோடு சென்று திருப்பூர் செல்கிறது.செங்கப்பள்ளியில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்களில் செல்லும் பொதுமக்கள் தாலுக்கா அலுவலகம் செல்ல கொடியம்பாளையம் நால்ரோடு அல்லது கவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேலாக நடந்து சென்று தாலுகா அலுவலகத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.வசதி படைத்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று வந்தாலும் பெரும்பாலான கூலி தொழிலாளிகள் அதிகம் நிறைந்த ஊத்துக்குளி பகுதியில் வயது முதிர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் என அனைவரும் மதிய வேளையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அரசின் நலத்திட்ட உதவிகள், அரசு சான்றிதழ்களை பெற நடந்து செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர். ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 37 பஞ்சாயத்து பொதுமக்கள் மற்றும் 2 பேரூராட்சி பொதுமக்கள் சிரமமின்றி தாலுகா அலுவலகம் சென்று வர செங்கப்பள்ளியிலிருந்து திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் சில அரசு பேருந்துகளை தாலுகா வழியாக இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொபைல் போன் சிக்னல் கிடைக்காது
ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்திற்குள் பி.எஸ்.என்.எல் உள்பட அனைத்து தனியார் மொபைல் நெட்வொர்க்கும் சிக்னல் கிடைப்பது இல்லை.இதன் காரணமாக தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளை அவசர காலத்தில் பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story