தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பகுதி.
பழுதான மின் கம்பம்
ஆரணி ஆரணிப்பாளையம் ஆறுமுகம் தெருவில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் பழுதடைந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இந்த கம்பத்தில் இருந்து 50-க்கும் மேற்ப்பட்ட மின் இணைப்பு உள்ளன. குடியிருப்புப் பகுதியில் உள்ள காற்று அடித்தாலோ, கனமழை பெய்தாலோ மின் கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. குடுயிருப்பு பகுதியில் உள்ள இன்த கம்பத்தால் விபத்து ஏற்படுவதற்குள் மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-ஏழுமலை, ஆரணி.
மின்விளக்கு பொருத்தப்படுமா?
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. பாதையின் இருபுறங்களிலும் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். உடனடியாக மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கம்பத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் அருகில் ரெயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கின்றன. இந்த சுரங்கப்பாதை வளைந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு எதிரொலிப்பான் போன்றவை அமைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமன், திருவண்ணாமலை
போக்குவரத்துக்கு லாயக்கற்ற பாதை
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள சின்ன சொக்கனாம்பட்டி கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கிருந்து மெயின் ரோட்டுக்கு செல்லும் பாதையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிலர் பழையவீட்டை இடித்து அதன் கழிவுகளை கொட்டி சென்றுவிட்டனர். இதனால் நடந்துகூட செல்லமுடியாத நிலை உள்ளது. அவசர தேவைக்கு இந்தவழியாக வாகனங்கள் செல்லமுடிவதில்லை. இதுகுறித்து புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்களின் நலன்கருதி உடனடியாக கழிவுகளை அகற்றி சாலை அமைக்க வேண்டும்.
-முருகன், சென்னசொக்கனாம்பட்டி.
இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
இந்துசமய அறநிலையத்துறை கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது, கோவில் கட்டிடங்களுக்கு வாடகை, குத்தகை நிர்ணயிப்பது போன்றவை நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை, திருவலம் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இதுபோன்ற கோவில்களின் சொத்து விவரங்கள், வருவாய் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
-பி.துரை, கல்புதூர்.
கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?
ஆரணி புதுக்காமூர் ஜெயம் நகர் விரிவாக்க பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர் வாரப்படாமல் சேறு நிறைந்து காணப்படுகிறது. இதனால் கழிநீர் செல்ல முடியாமல் ரோட்டில் தேங்கும்நிலை ஏற்படுகிறது. எனவே நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
-குமரன், ஆரணிப்பாளையம்.
டவுன் பஸ் இயக்க வேண்டும்
காட்பாடி காந்திநகரில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், கல்லூரி மற்றும் பள்ளிகள் உள்ளன. மின்வாரிய அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகின்றனர். மாலை 5 மணிக்கு பிறகு அலுவலகம் முடிந்து பணியாளர்கள் செல்லவோ, பள்ளி, கல்லூரி மாணவிகள் செல்லவோ இந்த பகுதுயாக டவுன் பஸ் வசதி இல்லை. காட்பாடியின் முக்கிய பகுதியான காந்திநகர் வழியாக மாலை நேரத்தில் டவுன் பஸ் இயக்க வேண்டும்.
பிரபாகர், காந்திநகர்.
Related Tags :
Next Story