தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தடையில்லாமல் மின் உற்பத்தி


தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தடையில்லாமல் மின் உற்பத்தி
x
தினத்தந்தி 23 March 2022 7:02 PM IST (Updated: 23 March 2022 7:02 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தடையில்லாமல் மின் உற்பத்தி நடைபெற்று வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 10 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், தடையில்லாமல் மின் உற்பத்தி நடைபெறுவதாகவும் அதிகாரி தெரிவித்தார்.
அனல் மின்நிலையம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 எந்திரங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. 
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மின்தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் முழு உற்பத்தி திறனுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி 4 மின்உற்பத்தி எந்திரங்கள் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
5-வது எந்திரத்தில் மட்டுமே 190 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் 840 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று கூடுதல் நிலக்கரி வரப்பெற்றதை தொடர்ந்து நிறுத்தப்பட்ட எந்திரங்கள் படிப்படியாக இயக்கப்பட்டன.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து அனல்மின் நிலைய அதிகாரி கூறுகையில், ‘‘தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு கடந்த சில நாட்களாக வரவும், செலவும் சரியான நிலையில்தான் இருக்கிறது. வரக்கூடிய நிலக்கரியை கொண்டு மின் உற்பத்தி தடைபடாமல் எந்திரங்களை இயக்கி வருகிறோம். தற்போது 1-வது எந்திரம் மட்டுமே செயல்படவில்லை. மற்ற 4 எந்திரங்களும் செயல்பட தொடங்கி விட்டன.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் தினசரி நிலக்கரி தேவை 9 ஆயிரம் டன் ஆகும். தற்போது 10 ஆயிரம் டன் அளவுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது. மேலும், 3 கப்பல்களில் சுமார் 60 ஆயிரம் டன் அளவுக்கு நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்துள்ளது. எனவே, அடுத்த சில நாட்களுக்கு நிலக்கரி பற்றாக்குறை ஏற்படாது. மேலும் பல கப்பல்களில் இருந்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி வருவதால், தடையில்லாமல் மின் உற்பத்தி நடைபெறும்’’ என்று கூறினார்.

Next Story