நடிகர் சல்மான் கானுக்கு கோர்ட்டு சம்மன்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 23 March 2022 7:11 PM IST (Updated: 23 March 2022 7:11 PM IST)
t-max-icont-min-icon

பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்த வழக்கில் நடிகர் சல்மான்கான் நேரில் ஆஜராக கோர்ட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

மும்பை,
பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்த வழக்கில் நடிகர் சல்மான்கான் நேரில் ஆஜராக கோர்ட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. 
செல்போன் பறிப்பு
 பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி மும்பை அந்தேரியில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவரை சில பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது ஆத்திரம் அடைந்த நடிகர் சல்மான் கான் தனது மெய்க்காவலர் நவாஸ் சேக்குடன் சேர்ந்து பத்திரிகையாளரான அசோக் பாண்டேயை மிரட்டியதோடு, அவரது செல்போனை பறித்ததாக கூறப்பட்டது. 
 இது தொடர்பாக அவர் அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சல்மான்கான் மற்றும் அவரது மெய்க்காவலர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டி.என்.நகர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. 
சம்மன் 
 அதன்பேரில் போலீசார்  விசாரணை அறிக்கையை அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில், இந்திய தண்டனை சட்ட பிரிவுகளான 504 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) போன்றவற்றின் கீழ் குற்ற முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டது. 
 இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மாஜிஸ்திரேட்டு ஆர்.ஆர். கான், குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது மெய்க்காவலர் ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Next Story