தூத்துக்குடியைகாசநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: கலெக்டர் செந்தில்ராஜ்


தூத்துக்குடியைகாசநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 23 March 2022 8:17 PM IST (Updated: 23 March 2022 8:17 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியைகாசநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தை காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற  பொதுமக்கள், தங்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி காசநோய் பரிசோதனைகள் செய்து ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட  கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காசநோய்க்கு சிகிச்சை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டும் 16 ஆயிரத்து 624 பேருக்கு காசநோய்க்கான சளிப்பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. அவர்களில் 2 ஆயிரத்து 68 பேருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 87 சதவீதம் பேர் பூரண குணம் பெற்று உள்ளனர்.
காசநோய்க்கான 4 மருந்துகளையும் ஒரே மாத்திரை வடிவத்தில் உள்ளடக்கிய எப்.டி.சி என்னும் மாத்திரைகளை கொண்டு டாட்ஸ் எனப்படும் முறையின் கீழ் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை முறையானது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும். டாட்ஸ் முறையில் காசநோய் சிகிச்சையை முழுகால அளவிற்கும் முறையாக எடுத்து கொண்டால் இந்த நோயிலிருந்து பூரண குணம் பெறலாம்.
எச்.ஐ.வியும் காசநோயும் மோசமான இணைத்தொற்றாகும். இவை 2-க்கும் ஒரே நேரத்தில் சிகிச்சையளிப்பதன் மூலம் நோயின் தன்மை அதிகரிப்பதையும், இறப்பையும் குறைக்கலாம். தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் ஏ.ஆர்.டி மையம் மூலம் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களில் காசநோயால் 38 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதிநவீன கருவி
மேலும், காசநோயை விரைந்து கண்டறியும் அதி நவீன சிபிநாட் கருவியானது தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் செயல் பட்டு வருகிறது. அதே போல் ட்ரூநாட் கருவியானது மாவட்ட காசநோய் மையத்திலும் திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வருகின்றது. இத்தகைய பரிசோதனையின் மூலம் காசநோய் அறிகுறி உள்ளவர்கள் தங்களுக்கு காசநோய் உள்ளதா? இல்லையா? என்பதை 2 மணி நேரத்திற்குள் தெரிந்து கொள்ளலாம்.
நோய் அச்சுறுத்தல்
சமீப காலமாக மருந்துக்கு கட்டுப்படாத எம்.டி.ஆர் காசநோயால் நமது சமுதாயம் அச்சுறுத்தப்பட்டு வருகிறது. சாதாரணமாக ஆரம்பநிலை காசநோயால் பாதிக்கப்படுவோர், தங்களுக்கான மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளாததே எம்.டி.ஆர் காசநோய்க்கு காரணமாக அமைகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 48 பேர் எம்.டி.ஆர் காசநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஒவ்வொரு தனியார் மற்றும் பெரு நிறுவன மருத்துவமனைகள் தங்களுடைய நோயாளிகளுக்கு காசநோய் இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக மாவட்ட காசநோய் மையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் காசநோய் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி உருவாகும்.
ரூ.500 உதவித்தொகை
மேலும் காசநோயாளிகள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெற்றிடும் வகையில் அவர்களுக்கு நிக்ஷாய் போஷன் யோஜனா திட்டத்தின் மூலம் சிகிச்சை காலங்களில் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல் தமிழக அரசின் சார்பில் காசநோயால் பாதிக்கப்படும் உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர்களுக்கு இடைக்கால இயலாமை நிவாரணமாக மாதந்தோறும் ரூ.ஆயிரம் சிகிச்சை காலங்களில் வழங்கப்பட்டு வருகிறது.வருகிற 2025-ஆம் ஆண்டிற்குள் காசநோயை முடிவுக்கு கொண்டு வர தீவிரமாக செயல்படும் அரசோடு, அனைத்து அரசு, தனியார் துறைகள் மற்றும் சமூக நலன் அக்கறை உள்ள நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கிட பாடுபட வேண்டும்.
பொதுஇடங்களில் எச்சில் துப்ப கூடாது
பொதுமக்கள் தொடர் இருமல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி காசநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தும்மும் போதும், இருமும் போதும் வாயைத் துணியால் மூடிக் கொள்ள வேண்டும். சாலை மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. காசநோய் பற்றிய விழிப்புணர்வை அருகில் உள்ளவர்களுக்கும் ஏற்படுத்திட வேண்டும். மேலும் தொடர்ச்சியான இருமல், காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைந்து வருதல், சளியில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி காசநோய் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story