கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை


கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை
x
தினத்தந்தி 23 March 2022 9:17 PM IST (Updated: 23 March 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

யானைகள் நடமாட்டம் எதிரொலியாக, கொடைக்கானல் ேபரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் பேரிஜம் ஏரி 

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் உள்ள சிறந்த சுற்றுலா இடங்களில் பேரிஜம் ஏரியும் ஒன்றாகும். இயற்கை எழில் கொஞ்சும் நன்னீர் ஏரியாக திகழும் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவர்.

கொடைக்கானல் வனச்சரணாலயத்துக்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. இதனால் ஏரிக்கு செல்ல வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.

கொடைக்கானல் மோயர் பாயிண்ட் பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் பேரிஜம் ஏரியை சென்றடையலாம். ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள தொப்பித்தூக்குப்பாறை, பேரிஜம் ஏரி வியூ, மதிகெட்டான் சோலை ஆகியவை காண்போரின் கண்களை கொள்ளை கொள்ளும்.

வாகனங்களுக்கு கட்டணம் வசூல்

பேரிஜம் ஏரிக்கு மோட்டார் சைக்கிள், பஸ்களில் சென்று வர அனுமதி கிடையாது. கார், வேன்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் சென்று வர அனுமதிக்கப்படுவர். தினமும் 50 வாகனங்களுக்கு மட்டுமே வனத்துறையினர் அனுமதி அளிப்பர். ஒரு வாகனத்துக்கு ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அந்த தடை நீக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களாக பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு சென்று வந்தனர்.

யானைகள் நடமாட்டம்

இந்நிலையில் நேற்று காலை பேரிஜம் ஏரி பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு யானைகள் முகாமிட்டிருப்பது தெரியவந்தது. கூட்டம், கூட்டமாக யானைகள் வலம் வந்ததை வனத்துறையினர் கண்டனர்.

இதன் எதிரொலியாக, பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரி மற்றும் தொப்பிதூக்குப்பாறை ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

யானைகள் நடமாட்டம் குறைந்த பிறகு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து உயர் அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள் என்றனர். பேரிஜம் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story