பா.ஜனதா தலைவர் வசிக்கும் அடுக்குமாடி கட்டிடத்திற்கு நோட்டீஸ் மாநகராட்சி திடீர் நடவடிக்கை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 23 March 2022 9:40 PM IST (Updated: 23 March 2022 9:40 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தலைவர் வசிக்கும் அடுக்குமாடி கட்டிடத்திற்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மும்பை,
பா.ஜனதா தலைவர் வசிக்கும் அடுக்குமாடி கட்டிடத்திற்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
அடுக்குமாடி கட்டிடம்
முன்னாள் மும்பை பா.ஜனதா இளைஞரணி தலைவர் மோகித் காம்போஜ். இவர் சாந்தாகுரூசில் உள்ள “குஷி பிரைட் பெல்மண்டோ“ என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள சொந்த குடியிருப்பில் வசித்து வருகிறார். 
இந்தநிலையில் சிவசேனா அதிகாரம் செலுத்தி வரும் மும்பை மாநகராட்சி இந்த கட்டிடத்திற்கு ஆய்வு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மும்பை மாநகராட்சி சட்டம் 1988-ன் விதிப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இந்த கட்டிடத்தில் எப்போது ஆய்வு நடக்கும் என கூறப்படவில்லை. 
மாநகராட்சி விளக்கம்
 இதுகுறித்து மோகித் காப்போஜ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எனக்கு எதிராக பொய் வழக்குகளை பதிவு செய்ய முடியாததால், இன்று என் வீட்டிற்கு மும்பை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது” என்று கூறியுள்ளார். 
அதேநேரம் மும்பை மாநகராட்சி, “இந்த நோட்டீஸ் முழு கட்டிடத்திற்கும் வழங்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட குடியிருப்பின் உரிமையாளருக்கும் இல்லை. அந்த கட்டிடத்தின் உரிமையாளர், தலைவர், செயலாளர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளது. 
சஞ்சய் ராவத் மீது குற்றம்சாட்டியவர்
சமீபத்தில் தான் மோகித் காம்போஜ் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 
ஜூகு பகுதியில் உள்ள மத்திய மந்திரியும், பா.ஜனதா தலைவருமான நாராயண் ரானேவின் பங்களாவில் சட்டவிரோதமாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியதுடன், அந்த கட்டிடத்தில் அதிரடி ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.  

Next Story