நீலகிரியில் உள்ள 35 ஊராட்சிகளுக்கு குடிநீரை ஆய்வு செய்ய பரிசோதனை கருவிகள்
நீலகிரியில் உள்ள 35 ஊராட்சிகளுக்கும் குடிநீரை ஆய்வு செய்ய பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
ஊட்டி
நீலகிரியில் உள்ள 35 ஊராட்சிகளுக்கும் குடிநீரை ஆய்வு செய்ய பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த நிலையில் உலக தண்ணீர் தினத்தையொட்டி தண்ணீர் குடிக்க உகந்ததாக உள்ளதா என்பதை கண்டறிய தரபரிசோதனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சர்மிளா பியூலின் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தண்ணீர் எடுத்து அதில் பாக்டீரியா, வேதியியல் பொருட்கள், இரும்புச்சத்து, நுண்கிருமிகள் போன்றவை உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை கருவிகள்
அதன் நிறம் மாறுகிறதா என்பதை அறிந்து தரம் பரிசோதிக்கப்பட்டது. இதன் மூலம் குடிநீர் தூய்மையாக உள்ளதா என்பதை அறிந்து குடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து நிர்வாக பொறியாளர் சர்மிளா கூறியதாவது:-
அமோனியா, காரத்தன்மை, அமிலத்தன்மை உள்பட 13 வகையான சோதனைகள் மூலம் தண்ணீர் தரத்தை பரிசோதிக்கலாம். நீலகிரியில் நீண்ட தூர கிராமங்களில் இருந்து மாவட்ட ஆய்வகத்துக்கு வர முடியாத காரணத்தால் 35 ஊராட்சிகளுக்கும் பரிசோதனை செய்யக்கூடிய கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
மழைநீர் சேகரிப்பு
வாரம் ஒருமுறை குடிநீரின் தரத்தை பரிசோதித்து வினியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாவட்ட ஆய்வகத்துக்கு குடிநீர் மாதிரி அனுப்பி வைக்கலாம். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், தனியார் கல்லூரிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2021-22-ம் ஆண்டில் நீலகிரியில் 6 ஆயிரம் குடிநீர் பரிசோதனை மேற் கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அந்த இலக்கு எட்டப் பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ஜீவா சங்கர், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதுபோன்று ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி தலைகுந்தா வில் நடைபெற்றது. பேரணியை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
Related Tags :
Next Story