ஊட்டி தேயிலை பூங்காவில் கிரீன் டீ விற்பனை அதிகரிப்பு


ஊட்டி தேயிலை பூங்காவில் கிரீன் டீ விற்பனை அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 March 2022 9:45 PM IST (Updated: 23 March 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தேயிலை பூங்காவில் கிரீன் டீ விற்பனை அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி

கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தேயிலை பூங்காவில் கிரீன் டீ விற்பனை அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தேயிலை தோட்டம்

ஊட்டி அருகே தொட்டபெட்டாவில் தோட்டக்கலைத்துறையின் தேயிலை பூங்கா உள்ளது. அங்கு 6 ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு பறிக்கப்படும் பச்சை தேயிலை கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. 

பின்னர் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு நீலகிரியின் முக்கிய பொருளாதாரமான தேயிலை விவசாயத்தை பிரபலப்படுத்தவும், தேயிலைத்தூள் உற்பத்தி செய்வது குறித்து அறிந்து வாங்கி செல்லவும் சிறிய தொழிற்கூடம் அமைக்கப்பட்டது.

140 கிலோ விற்பனை

இயற்கையாக கிரீன் டீ தயாரிக்கப்படுவதால், இதற்கு மவுசு அதிகம். ஒரு கிலோ கிரீன் டீ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டம் நடுவே இருக்கையில் அமர்ந்து தேநீர் அருந்தி தேயிலைத்தூள் வாங்கிச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறியதாவது:-

தேயிலை பூங்காவில் கடந்த 3 ஆண்டுகளாக தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு பின்னர் கிரீன் டீ விற்பனை அதிகரித்து 140 கிலோ விற்பனையாகி உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய 50 கிராம் முதல் பேக்கிங் செய்யப்படுகிறது.

600 கிலோ உற்பத்தி

ஒரு ஆண்டுக்கு 500 கிலோ முதல் 600 கிலோ வரை தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது சுற்றுலா பயணிகள் தினமும் 2 கிலோ தேயிலைத்தூள் வாங்கி செல்கின்றனர். இதன்மூலம் முழு ஊரடங்கால் தேயிலை பூங்கா மூடப்பட்ட போது ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடிகிறது என்றனர்.


Next Story