கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை வணிக நிறுவனங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை  வணிக நிறுவனங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 March 2022 10:26 PM IST (Updated: 23 March 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்


கள்ளக்குறிச்சி

பணிக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வதை தவிர்ப்பது மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

விழிப்புணர்வு ஏற்படுத்த

தமிழக முதல்-அமைச்சர் பிளாஸ்டிக் மாசில்லா மாநிலமாக உருவாக்குவதற்கு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து  பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு இயக்கத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி தொடங்கி வைத்தார். 
மேலும் ஒரு முறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்றுப்பொருட்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டத்தை மாதந்தோறும் நடத்திட அறிவுறுத்தினார்.அதன்படி இந்த பணிக்குழு கூட்டம் நடைபெற்றது.

தவிர்க்க வேண்டும்

இக்கூட்டத்தில் பணிக்குழு உறுப்பினர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 412 கிராம ஊராட்சிகளில் உணவுப்பொருட்களை கட்ட உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் தாள் உரை, பைகள், பொட்டலங்கள், உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பேப்பர் கப்புகள், தெர்மகோல் குவளைகள், பிளாஸ்டிக் கொடிகள், மேசையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள்கள் ஆகிய தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களின் சேகரிப்பு, பயன்பாடு, உற்பத்தி, வினியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை வணிக நிறுவனங்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

மாற்று பொருட்கள்

இதற்கு மாற்றாக வாழை, தாமரை, பாக்குமர இலைகள், காகித சுருள், துணிப்பைகள், மண் கப்புகள், மண்பாண்டங்கள், உலோக, பீங்கான், கண்ணாடி, குவளைகளை பயன்படுத்துவது, சணல் பைகள், காகித கொடிகள் ஆகிய பொருட்களை பொதுமக்கள், பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நமது பாரம்பரிய மஞ்சப்பை அன்றாட வீட்டு உபபோக பொருட்கள் வாங்குவதற்கு உபயோகப்படுத்தி, சுற்றுச்சூழலை பேணி பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

துண்டு பிரசுரம்

பின்னர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட அளவிலான பணிக்குழு அலுவலர்களுக்கு கலெக்டர் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் மஞ்சப்பை ஆகியவற்றை வழங்கினார். 
இந்த கூட்டத்தில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிசாமி, உதவி பொறியாளர் சந்திரசேகரன், முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.











Next Story