உத்தவ் தாக்கரேவை பதவி விலக கூறுவதா?-நிதேஷ் ரானேக்கு காங்கிரஸ் பதிலடி
மைத்துனர் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதால் உத்தவ் தாக்கரேவை பதவி விலக கூறிய நிதேஷ் ரானேவுக்கு, காங்கிரஸ் தலைவர் நானா படோலே பதிலடி கொடுத்துள்ளார்.
மும்பை,
மைத்துனர் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதால் உத்தவ் தாக்கரேவை பதவி விலக கூறிய நிதேஷ் ரானேவுக்கு, காங்கிரஸ் தலைவர் நானா படோலே பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜினாமா செய்யவேண்டும்
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீதர் மாதவ் பதான்கர். அமலாக்கத்துறை இவரது கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான தானே வர்த்தக் நகரில் கட்டப்பட்டுள்ள ரூ.6 கோடியே 45 லட்சம் மதிப்புள்ள 11 வீடுகளை அதிரடியாக முடக்கியது.
2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ. நிதேஷ் ரானே வலியுறுத்தி உள்ளார்.
இவரின் கருத்து குறித்து காங்கிரஸ் தலைவர் நானா படோலேவிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
என்ன ஆனது?
நிதேஷ் ரானேவின் தந்தையான மத்திய மந்திரி நாராயண் ரானே மற்றும் கிருபாசங்கர் சிங் ஆகியோர் காங்கிரசில் இருந்து பிரிந்து பா.ஜனதாவில் சேருவதற்கு முன்பு அவர்கள் மீது கிரித் சோமையா கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த குற்றச்சாட்டுகள் இப்போது என்ன ஆனது?
இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாபவர்கள் பா.ஜனதாவில் இணைந்தவுடன் புனிதர்களாக மாறி விடுகிறார்களா?
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், எரிபொருள் விலை உயர்வு போன்ற முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே மகா விகாஸ் அகாடி தலைவர்கள் மீது பா.ஜனதாவினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story