மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் ரெயில்வே போலீஸ்காரர் துணிச்சலுடன் மீட்டார்
விட்டல்வாடி ரெயில் நிலையத்தில் குர்லா-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரை ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் துணிச்சலுடன் மீட்டு பாராட்டை பெற்றார்.
அம்பர்நாத்,
விட்டல்வாடி ரெயில் நிலையத்தில் குர்லா-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரை ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் துணிச்சலுடன் மீட்டு பாராட்டை பெற்றார்.
தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
கல்யாணை அடுத்த விட்டல்வாடி ரெயில் நிலையம் 1-வது பிளாட்பாரத்தில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது குர்லாவில் இருந்து மதுரை நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டு இருந்தது. பிளாட்பாரத்தில் நின்ற வாலிபர் திடீரென தண்டவாளத்தில் குதித்து நின்று கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் ரிஷிகேஷ் மானே வாலிபரை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தார்.
துணிச்சலுடன் மீட்டார்
ஆனால் வாலிபர் அங்கிருந்து சிறிதும் நகராமல் நின்றார். எக்ஸ்பிரஸ் ரெயில் நெருங்கி வந்ததால் பதற்றம் அதிகரித்தது. ரெயில்வே போலீஸ்காரர் ரிஷிகேஷ் மானே சிறிதும் தாமதிக்காமல் தனது உயிரை துச்சமென கருதி தண்டவாளத்தில் குதித்தார். தண்டவாளத்தில் நின்ற வாலிபரை மறுபுறம் தள்ளிக்கொண்டு விழுந்தார். இதனால் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
துணிச்சலுடன் செயல்பட்டு வாலிபரின் உயிரை காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்காரர் ரிஷிகேஷ் மானேவை பயணிகள், அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். தற்கொலைக்கு முயன்ற வாலிபரை பிடித்து ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
தண்டவாளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரை ரெயில்வே போலீஸ்காரர் காப்பாற்றிய திகில் சம்பவம் தொடர்பான வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story