பாரதியார் ஓவியம் வரைந்த மாணவருக்கு பரிசளித்த கலெக்டர்
ஆண்டிப்பட்டி அருகே அரசு பள்ளியில் ஆய்வு செய்தபோது பாரதியார் ஓவியம் வரைந்த மாணவருக்கு கலெக்டர் முரளிதரன் பரிசு வழங்கினார்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே ஒக்கரைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு, சமையல் அறை, குடிநீர் மற்றும் மின்சார வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வகுப்பறைகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடிய போது, மாணவர்கள் சிலர் தங்களின் நோட்டு புத்தகங்களில் ஓவியங்கள் வரைந்து இருந்தனர். அதைப் பார்வையிட்ட கலெக்டர் அந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது பாரதியார் ஓவியத்தை சிறப்பாக வரைந்து இருந்த மாணவர் சென்னகிருஷ்ணன் என்பவருக்கு கலெக்டர் பேனா பரிசளித்து பாராட்டினார்.
மேலும், மாணவ, மாணவிகளின் தனித்திறனை கண்டறிந்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி உடனிருந்தார். அதுபோல், மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட எம்.சுப்புலாபுரத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளையும், திருமலாபுரம், ஒக்கரைப்பட்டி, மாரிக்குண்டு பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story