டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி


டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 23 March 2022 10:55 PM IST (Updated: 23 March 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிாிழந்த சம்பவத்தில் நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செஞ்சி, 

செஞ்சி வட்டம் சிறுகடம்பூர் கிராமம் சிங்கவரம் சாலையில் உள்ள அம்மாச்சியார் கோவில் அருகே மதன் என்பவருக்கு விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழவுபணி மேற்கொண்டபோது, டிராக்டர் மண்ணில் சிக்கியது. இதை மீட்டெடுப்பதற்காக செஞ்சி சிறுகடம்பூரை சேர்ந்த விவசாயி பாஸ்கர்(வயது 45) வரவழைக்கப்பட்டார். இவர் தனது டிராக்டர் மூலம் கயிறு கட்டி மண்ணில் சிக்கிய டிராக்டரை இழுத்தபோது தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் அடியில் சிக்கிய பாஸ்கர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

சாலை மறியல்

இதுபற்றி அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே பாஸ்கர் இறந்தது பற்றி அறிந்த அவரது உறவினர்கள், டிராக்டர் இழுக்க அழைத்துச்சென்ற நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செஞ்சி கூட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி தாசில்தார் பழனி, இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதுதொடர்பாக செஞ்சி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story