தாந்தோணிமலையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி
தாந்தோணிமலையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி நடந்தது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
கரூர்,
கண்காட்சி
தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டுகையேடுகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாணவ-மாணவிகளின் திறன் மேம்பாட்டினை மேம்படுத்தும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் "நான் முதல்வன்" என்ற சிறப்பான திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்கள். 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.நமது தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான வாய்ப்புகளும், சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன. அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது.
சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்
ஏராளமான தொழில் வாய்ப்புகளை பெறுவதற்கு மாவட்ட தொழில்மையத்தின் மூலமும், தாட்கோ மூலமும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது.
வாழ்க்கையில் முன்னேற மாணவர்களாகிய நீங்கள் ஐந்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முதலாவதாக தன்னிலை அறிந்து கொள்ளுதல், அதவாது உங்களுக்குள் என்னென்ன தனித்திறமை இருக்கின்றது என்பதை நீங்கள் உணர வேண்டும். 2-வது சூழ்நிலையினை சரியாக, முறையாக புரிந்துகொள்ளுதல்.3-வது உங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்து அற்கான இலக்கை அடைவதற்கு தேவையான திட்டமிடுதல், 4-வது இலக்கை நோக்கிய பயணத்தை தொடங்கி வெற்றிகரமாக இலக்கை அடைதல், 5-வது நீங்கள் வெற்றியடைய கடந்துவந்த பாதையினையும், சந்தித்த சிக்கல்களையும், அவற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் உங்கள் நண்பர்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துக்கூறுதல். இந்த வழிமுறைகளை உங்கள் வாழ்வில் மறக்காமல் கடைபிடித்து, அனைவரும் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உயர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினாா்.
இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்புலட்சுமி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story