பாலம் அமைக்கும் பணியால் வாகன ஓட்டிகள் அவதி
தெரசா கார்னர் பகுதியில் பாலம் அமைக்கும் பணியால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதனை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
பாலம் அமைக்கும் பணி
ஏமூர் பிரிவு சாலையில் இருந்து காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் பெய்யும் மழை நீரானது தாழ்வான பகுதியில் உருண்டோடி அவை கரூர் -திருச்சி சாலையில் தெரசா கார்னர் பிரிவில் இருந்து பிரிந்து செல்லும் பசுபதிபாளையம் சாலை வழியாக சாலையை கடந்து அமராவதி ஆற்றில் கலக்கும் வகையில் அமைந்துள்ளது.
அவ்வாறு மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் சாலைகளில் தங்குதடையின்றி சென்று அமராவதி ஆற்றில் கலக்கும் வகையில் தெரசா கார்னர் பகுதியில் ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
வாகன ஓட்டிகள் கோரிக்கை
இதனால் கரூரில் இருந்து பசுபதிபாளையம், ராமானூர், தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துகள் சென்றுவர அருகாமையில் உள்ள பொது இடத்தில் மண் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இச்சாலை மணல் பரப்பு நிறைந்த பகுதியாக இருப்பதால் இரவு நேரங்களில் கனரக வாகனங்களான லாரிகள் மற்றும் பேருந்துகள் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து வாகனங்கள் பாலத்தில் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாலம் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story