மஞ்சப்பை பயன்பாட்டை உருவாக்க வேண்டும் கலெக்டர் மோகன் அறிவுரை


மஞ்சப்பை பயன்பாட்டை உருவாக்க வேண்டும் கலெக்டர் மோகன் அறிவுரை
x
தினத்தந்தி 23 March 2022 11:14 PM IST (Updated: 23 March 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், ஆரோக்கியமுடன் வாழவும் மஞ்சப்பை பயன்பாட்டை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துறையின் சார்பில் பாலித்தீன் பை தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி சுற்றுச்சூழலை பாதுகாத்திட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு அவர்களுக்கு மஞ்சள் பை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

பாலித்தீன் பொருட்கள் சுகாதார சீர்க்கேட்டை உருவாக்குவதுடன் பொதுமக்களுக்கு நோய் தொற்றை உருவாக்கிடவும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இருந்து வருகின்றன. இத்தகைய நிலையை மாற்றிட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மஞ்சப்பை பயன்பாடு

அந்த வகையில் தற்போது மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன. இதனை நன்கு உணர்ந்து பொதுமக்கள் ஆரோக்கியமுடன் வாழவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்து, மஞ்சப்பையை கையில் எடுத்து மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை உருவாக்கிட வேண்டும். அதற்கு அரசுத்துறை அலுவலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இத்தகைய திட்டத்தை கடைபிடித்து பாதுகாப்பான வாழ்க்கைக்கு பயன்பாடற்ற பொருட்களை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story