நாமக்கல்லில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தேர்வு போட்டிகள்-260 மாணவ, மாணவிகள் பங்கேற்பு


நாமக்கல்லில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தேர்வு போட்டிகள்-260 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 March 2022 11:20 PM IST (Updated: 23 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தேர்வு போட்டிகள் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இதில் 260 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்:
விளையாட்டு விடுதிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிடவசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
அதன்படி மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
தேர்வு போட்டிகள்
இந்த விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7, 8, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் நேற்று நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் (பொறுப்பு), மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பயிற்சியாளர்கள் கோகிலா, புவனேஸ்வரி, பிரபுகுமார், சீனிவாசன், ரகுபதி உள்ளிட்டோர் போட்டிகளை நடத்தினர்.
கபடி, கால்பந்து, நீச்சல், வாள்சண்டை, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஓட்ட பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 80 மாணவிகள், 180 மாணவர்கள் என மொத்தம் 260 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் சிறந்த வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாநில அளவிலான போட்டி வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story