வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆண்டு சிறை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்,
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கணேசன் மகள் சாந்திதேவி (வயது 32). இவருக்கும் திண்டிவனம் அருகே கீழ்எடையாளத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் தமிழ்மணிக்கும் (35) கடந்த 22.4.2010 அன்று திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தமிழ்மணி, சென்னையில் உள்ள மாமியார் வீட்டோடு தங்கிவிட்டார். அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் திருமணம் முடிந்த 6 மாதங்கள் கழித்து தமிழ்மணி, சென்னையில் இருந்து திண்டிவனம் கீழ் எடையாளத்துக்கு வந்துவிட்டார். அதன் பிறகு மனைவியை பார்க்க சென்னை செல்லவில்லை. இந்த சூழலில் தமிழ்மணியின் தந்தை சின்னத்தம்பி, தாய் தனலட்சுமி, சகோதரர் ஏழுமலை ஆகியோர் சென்னை சென்று சாந்திதேவியை கீழ்எடையாளத்துக்கு அனுப்பி வைக்கும்படியும், இல்லையெனில் தமிழ்மணிக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகவும் சாந்திதேவியின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து கடந்த 29.5.2011 அன்று சாந்திதேவியை அவரது பெற்றோர் திண்டிவனம் கீழ்எடையாளத்தில் உள்ள அவரது கணவர் தமிழ்மணியின் வீட்டில் கொண்டு வந்து விட்டுச்சென்றனர். ஆனால் அன்று இரவே கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் 30.5.2011 அன்று சாந்திதேவி இறந்து விட்டதாக அவரது பெற்றோரை தொடர்புகொண்டு தமிழ்மணியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
கணவருக்கு 3 ஆண்டு சிறை
இந்த சம்பவம் குறித்து சாந்திதேவியின் அண்ணன் விவேகானந்தன், மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது தங்கை சாந்திதேவியை அவரது கணவர் தமிழ்மணி, மாமனார் சின்னத்தம்பி, மாமியார் தனலட்சுமி, தமிழ்மணியின் சகோதரர் ஏழுமலை ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் சாந்திதேவி இறந்து விட்டதாகவும், அவரது இறப்புக்கு காரணமான 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரித்ததில் வரதட்சணை கொடுமை காரணமாக சாந்திதேவி மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேர் மீதும் போலீசார், விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட தமிழ்மணிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், சின்னத்தம்பி, தனலட்சுமி, ஏழுமலை ஆகிய 3 பேரையும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.