பள்ளிக்குள் புகுந்து மிரட்டல்; ஆசிரியர்கள் போராட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 23 March 2022 11:45 PM IST (Updated: 23 March 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிக்குள் புகுந்து உடற்கல்வி ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்ததால் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோகைமலை, 
தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளியின் தலைமையாசிரியர் நேற்று விடுமுறை என்பதால் அந்த பணியை உதவி தலைமை ஆசிரியர் கவனித்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த சில மாணவர்கள் முடி வெட்டாமல் இருந்துள்ளனர். இதனை உடற்கல்வி ஆசிரியர் கண்டித்துள்ளார். இருப்பினும் ஒரே ஊரை சேர்ந்த சில மாணவர்கள் முடி வெட்டாமல் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனால் அந்த மாணவர்களை முடி வெட்டிய பிறகு தான் பள்ளிக்கு வர வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர் எச்சரித்துள்ளார். 
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் தங்களது நண்பர்களுக்கு போன் செய்து பள்ளிக்கு வரவழைத்துள்ளனர். அதன்படி 6-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த உடற்கல்வி ஆசிரியரை மிரட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதையடுத்து ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி ஆசிரியர்கள் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் தோகைமலை போலீஸ் நிலையத்திற்கு சென்று பள்ளிக்குள் புகுந்து மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story