ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடம்; குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு
உப்பிடமங்கலம் அருகே ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடம் இருப்பதாகக் கூறி குழந்தைகளை பள்ளிக்கு பெற்றோர் அனுப்ப மறுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வெள்ளியணை,
அரசு தொடக்கப்பள்ளி
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே ரெங்கபாளையத்தில் 1960-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது சின்னத்தம்பிபாளையம், பழையரெங்கபாளையம், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் இதற்கு முன்பு இங்கு பணிபுரிந்த தலைமை ஆசிரியை தங்கம்மாள் தனது சொந்த செலவில் வளாகம் முழுவதும் கம்பி வேலி அமைத்துள்ளார். ஆனால் நுழைவு வாயிலில் கேட் வசதி இல்லாமல் இருந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒன்றிய பொது நிதியிலிருந்து கூடுதல் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது.
அனுப்ப முடியாது
அப்போது அந்த ஒப்பந்ததாரர் மூலம் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு கேட் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருக்கும்பொழுது நுழைவு வாயில் தூண் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதை அறிந்த தலைமையாசிரியர் வாசுகி குழந்தைகளின் பெற்றோர்களை அழைத்து கேட்டபோது பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாது என கூறியுள்ளனர். இத்தகவலை தலைமை ஆசிரியை கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை
இதனையடுத்து பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் சகுந்தலா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்தர், வருவாய் ஆய்வாளர் ஜெயவேல், கிராம நிர்வாக அலுவலர் திலீபன், ஆகியோர் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது 50 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய இட வசதி இல்லை, சமையல் கூடம் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. திறந்த வெளியில் சமைக்கப்படுகிது, விளையாட்டு மைதானம் இல்லை. இந்த வசதிகளை செய்து தர வேண்டும். மேலும் கட்டுமானத்தின் உறுதிதன்மையை ஆராய்ந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை கேட்டறிந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என கூறியதையடுத்து பொதுமக்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப ஒப்புக்கொண்டனர்.
Related Tags :
Next Story