எடமேலையூரில் விழிப்புணர்வு ஊர்வலம்


எடமேலையூரில் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 23 March 2022 11:53 PM IST (Updated: 23 March 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

உலக தண்ணீர் தினத்தையொட்டி எடமேலையூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன் தொடங்கி வைத்தார்.

வடுவூர்:
உலக தண்ணீர் தினத்தையொட்டி எடமேலையூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
உலகில் உள்ள மொத்த தண்ணீரில் 97 சதவீதம் கடல் நீராக உள்ளது. மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு உள்ள நல்ல தண்ணீரின் அளவு 0.6 சதவீதம் மட்டுமே. தண்ணீர் வருங்கால சந்ததிகளுக்கும் தொடர்ந்து கிடைக்கும் அளவிற்கு பயன்படுத்திட மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பண்ணை குட்டைகளை அமைத்து தருகிறது. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முக்கிய பணியாக வாய்க்கால்கள் வெட்டுதல், அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தல் ஆகும்.  இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மன்னார்குடி அருகே எடமேலையூரில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. 
ஊர்வலத்தை வெண்ணாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன் தொடங்கி வைத்தார். உதவி பொறியாளர் ரவீந்திரன், நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், எடமேலையூர் நடுத்தெரு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா பன்னீர்செல்வம், வேளாண் பொறியியல் துறை இளநிலை பொறியாளர் சண்முகம், கால்நடைத்துறை டாக்டர் ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கால்நடை மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
மன்னார்குடி
மன்னார்குடி அரசு உதவி பெறும் தேசிய மேல்நிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் வரவேற்று பேசினார். உதவி தலைமை ஆசிரியர் திலகர், நாட்டுநலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா, முதுகலை இயற்பியல் ஆசிரியர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவ விருந்தினராக பள்ளியின் தாளாளர் ராமநாதன் பங்கேற்றார். 
சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் பங்கேற்று தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தையும் 3-வது உலக போர் ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்பதையும், மாணவர்கள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். முன்னதாக உலக தண்ணீர் தினம் தொடர்பாக நடத்தப்பட்ட ஓவிய போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. ஓவிய ஆசிரியர் ரவிச்சந்திரன் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். நிறைவாக என்.சி.சி. அதிகாரி திவாகர் நன்றி கூறினார்.

Next Story