புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் களைகட்டும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் 2 ஆண்டுகளுக்கு பிறகு கலைஞர்கள் உற்சாகம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் களைகட்டுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கலைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை:
கோவில் திருவிழாக்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில்கள் ஏராளமாக உள்ளன. இதில் தற்போது திருவிழாக்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதில் நாட்டுப்புற கலைஞர்களின் மேடை நிகழ்ச்சிகளும், கரகாட்டம் உள்பட ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் களைக்கட்டி வருகிறது. இதில் நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. தெம்மாங்கு பாடல்கள், காதல் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், ஆன்மிக பாடல்கள் உள்ளிட்ட பாடல்கள் பாடப்படுவதோடு, வேடம் அணிந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
கலைஞர்கள் மகிழ்ச்சி
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கின் காரணமாக கலைநிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறவில்லை. இதனால் நாட்டுப்புற கலைஞர்கள் உள்பட கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது ஊரடங்கு தளர்வால் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகிறது. இது தொடர்பாக நாட்டுப்புற மேடை கலைஞர் சங்கத்தின் செயலாளர் ஆக்காட்டி ஆறுமுகம் கூறியதாவது:- கோவில் திருவிழாக்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் தற்போது கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மேடைகளில் ஏறி நிகழ்ச்சிகள் நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. மக்களும் அதிகமாய் வந்து பார்க்கின்றனர். தற்போது உள்ள காலத்திற்கு ஏற்ப இளைஞர்களை கவரும் வகையிலும் பாடல்கள் பாடுகிறோம். ஆடல், பாடல்களும் உண்டு. கலைஞர்களுக்கு தற்போது தான் வருமானம் வரத்தொடங்கி உள்ளது.
ஆடி மாதம் வரை...
திருவிழாக்கள் ஆடி மாதம் வரை நடைபெறுவது உண்டு. அதுவரை எங்களுக்கு கலை நிகழ்ச்சிகள் ஆர்டர் கிடைக்கும். எங்களை சார்ந்துள்ள தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது மைக் செட் அமைத்தல், பந்தல் அலங்காரம், மின்விளக்கு அமைத்தல், கொட்டகை அமைத்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story