நெய்வேலியில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை
வருகிற 28, 29-ந்தேதிகளில் நடைபெறும் பொது வேலைநிறுத்தம் குறித்து நெய்வேலியில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெய்வேலி,
முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டதிருத்தங்களை திரும்ப பெற கோரியும், பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை கைவிட கோரியும், பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டுவது, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டுவது, அதுவரையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோருவது, புதிய பென்சன் திட்டத்தை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28 மற்றும் 29-ந்தேதிகளில் நாடுதழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற இருக்கிறது.
சாலை மறியல்
இந்த பொது வேலை நிறுத்தம் தொடர்பான ஆயத்த ஆலோசனை கூட்டம் நெய்வேலி என்.எல்.சி. தொ.மு.ச. வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு என்.எல்.சி. தொ.மு.ச. தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளரும் பேரவை செயலாளருமான பாரி முன்னிலை வகித்தார்.
தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து பேசினார்கள்.
மேலும் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது, அன்றைய தினம் நெய்வேலியில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் தொ.மு.ச. பேரவை இணை பொதுச்செயலாளர் சுகுமார், மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்முடி, அலுவலக செயலாளர் ஜெரால்டு, சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கருப்பையா, வேல்முருகன், ஜெயராமன், திருவரசு, ஐ.என்.டி.யு.சி. ரவிக்குமார், குள்ளபிள்ளை மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் காசிநாதன், மத்தியாஸ், குணசேகரன், என்.எல்.சி. தொ.மு.ச. துணைத்தலைவர்கள், பகுதி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொ.மு.ச. பொருளாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story