‘பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் அடைய உறுதி ஏற்று செயல்படுங்கள்’
பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் அடைய அனைவரும் உறுதி ஏற்று செயல்படுங்கள் என்று வடலூரில் நடந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசினார்.
வடலூர்,
வடலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் வடலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வடலூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட 41 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேடு, தேர்ச்சி விகிதம் குறித்த விவரங்களை ஆசிரியர்களிடம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
கல்வியின் முக்கியத்துவம்
தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை பதிவை கண்காணிக்க வேண்டும். சரிவர பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பள்ளிக்கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறிவுறுத்த வேண்டும்.
மேலும் கிராம பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் ஆகியோர்களை கொண்டு பள்ளிக்கு வராத மற்றும் இடைநிற்றல் போன்ற நிலையில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களை நேரடியாக அணுகி, அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு வகுப்புகள்
மாணவர்கள் எந்தெந்த பாடங்களில் பின் தங்கியுள்ளனர் என்பதை கண்டறிந்து அதற்குரிய சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் பள்ளியின் தலைவராக செயல்படுவதோடு, அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும். இதன் மூலம் நமது மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் அடைய அனைவரும் உறுதி ஏற்று செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் பூபதி, மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கலா, வட்டாரக்கல்வி அதிகாரிகள், மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story