மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி ஊராட்சி தலைவர் போராட்டம்
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் சரிவர வராததால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி ஊராட்சி தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
வாய்மேடு;
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் சரிவர வராததால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி ஊராட்சி தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கூட்டுக்குடிநீர்
நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர், மருதூர், பஞ்சநதிக்குளம், தென்னடார் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நம்பி உள்ளனர். இந்த நிலையில் வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி சாலையில் பல்வேறு இடங்களில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து 2 மாதங்களாகியும் இதை சீரமைக்க அதிகாரிகள் முயற்சிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சரிவர தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
மக்கள் அவதி
இந்நிலையில் பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் வரவில்லை. இதற்கு காரணம் அங்கு உள்ள மின் மோட்டார் பழுதடைந்து தண்ணீர் சேமிக்கும் இடத்துக்கு தண்ணீரை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
நேற்று ஊராட்சி தலைவரிடம் பொதுமக்கள் இது குறித்து முறையிட்டனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவர் வீரதங்கம் ஊராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் ஏறிஅமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பரபரப்பு
இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய உதவி ஆணையர் அண்ணாதுரை சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு குடிநீர் ஏற்றம் செய்யும் மின் மோட்டாரை சரி செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவர் வீரதங்கம் போராட்டத்தை கைவிட்டார். சுமார் 1 மணி நேரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அமர்ந்து குடிதண்ணீருக்காக போராடிய ஊராட்சி தலைவரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story