வேளிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தக்கலை,:
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் முருகன்-வள்ளி திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதனையொட்டி அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் முதலில் வள்ளியும், அதனை தொடர்ந்து முருகப்பெருமானும் தனித்தனியாக கோவிலில் இருந்து புறப்பட்டு மலையில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
பிறகு வள்ளிதேவியின் உறவினர்களான குறவர் சமுதாயத்தினர் ஏற்பாட்டில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மணவாளர்களாக அமர்ந்திருந்த முருகப்பெருமான்-வள்ளிக்கும், அருகில் பாறை குகைக்குள் அமர்ந்திருந்த விநாயகருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு மலையில் இருந்து வள்ளிதேவியை அழைத்து கொண்டு கோவிலுக்கு புறப்பட்ட முருகப்பெருமானை தடுத்து நிறுத்திய வள்ளிதேவியின் உறவினர்கள், வழிநெடுகிலும் முருகப்பெருமானோடு போர்புரியும் குறவர் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து முருகப்பெருமானும், வள்ளி தேவியும் கோவிலுக்குள் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் ஊஞ்சலில் எழுந்தருளினர். பிறகு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் திருவிழாக்குழு புரவலர் பிரசாத், தலைவர் சுனில்குமார், செயலாளர் சுரேஷ், பொருளாளர் செந்தில்குமார், முன்னாள் திருவிழாக்குழு தலைவர் குமரி ப.ரமேஷ், உறுப்பினர் கொ.சி.ராமதாஸ், பிரம்மபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மாதவன் பிள்ளை, முன்னாள் நகர்மன்ற தலைவர் தீபா சுனில், நகராட்சி துணைத்தலைவர் மணி, உறுப்பினர்கள் உண்ணிகிருஷ்ணன், கிருஷ்ணபிரசாத், பிரியதர்ஷினி, பா.ஜ.க. நிர்வாகி சுகுமாரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் மேற்பார்வையில் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில்குமார், கோவில் மேலாளர் சுதர்சன குமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
---
Related Tags :
Next Story