ஆடுதுறை பேரூராட்சி தலைவராக பா.ம.க.வை சேர்ந்த ம.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு


ஆடுதுறை பேரூராட்சி தலைவராக பா.ம.க.வை சேர்ந்த ம.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 24 March 2022 1:54 AM IST (Updated: 24 March 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஆடுதுறை பேரூராட்சி தலைவராக பா.ம.க.வை சேர்ந்த ம.க.ஸ்டாலினும், துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கமலா சேகரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திருவிடைமருதூர்:
ஆடுதுறை பேரூராட்சி தலைவராக பா.ம.க.வை சேர்ந்த ம.க.ஸ்டாலினும், துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கமலா சேகரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  
தேர்தல் தள்ளி வைப்பு 
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சியில் கடந்த 4-ந் தேதி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வாக்களிக்க  தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் வரவில்லை. மொத்தம் 15 கவுன்சிலர்களில் 12 பேர் வந்திருந்தனர். 
தேர்தல் நடத்தும் அலுவலர், தலைவர் தேர்தலை நடத்த முன்வந்தபோது தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தலைவர் தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்களை கிழித்தெறிந்தனர். இதனால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. 
4 கவுன்சிலர்கள் மீது வழக்கு 
தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்கள் கிழித்தது தொடர்பாக தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் 4 பேர் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 
இந்த நிலையில் பா.ம.க. உறுப்பினர் 4 பேர், அ.தி.மு.க. உறுப்பினர்2 பேர், சுயேச்சைகள் 2 ேபர் என மொத்தம் 8 பேர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் 
இந்த நிலையில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் 23-ந் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். 
அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு தலைவர் தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணைத்தலைவர் தேர்தலும் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலராக ஆதிதிராவிடர் நலத்துறை துணை கலெக்டர் ரங்கராஜன், தேர்தல் பார்வையாளர் கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்தலை முன்னிட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அசோகன், வெற்றிவேந்தன் மற்றும் 9 இன்ஸ்பெக்டர்கள், 18 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.
போட்டியின்றி தேர்வு 
நேற்று காலை நடந்த ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தலில் 8 உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதில் 12-வது வார்டு பா.ம.க. உறுப்பினர் ம.க.ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தலைவர் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் 7 பேர் கலந்து கொள்ளாமல் தேர்தலை புறக்கணித்தனர். 
பின்னர் மதியம் 2.30 மணிக்கு நடந்த துணைத்தலைவர் தேர்தலில் பா.ம.க.-4, அ.தி.மு.க.-2, சுயேச்சைகள் 2 என மொத்தம் 8 பேர் மட்டும் வந்தனர். இதில் 4-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் கமலா சேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவர் தேர்தலையும் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 7 உறுப்பினர்கள் புறக்கணித்தனர். 
வெற்றி சான்றிதழ்
ஆடுதுறை பேரூராட்சி தலைவராக தேர்வு பெற்ற ம.க.ஸ்டாலின்,  துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட கமலா சேகர் ஆகியோருக்கு வெற்றி சான்றிதழ்களை கும்பகோணம் ஆர்.டி.ஓ. லதா, தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜன் ஆகியோர் வழங்கினர்.

Next Story