குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன்  சாலை மறியல்
x

ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராம பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமம் வடக்குத் தெருவில் புதிதாக போர் போடப்பட்டு அதிலிருந்து மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு கழுவந்தோண்டி வடக்குத் தெரு, நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சமீப நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வடக்குத் தெரு, நடுத்தெரு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
சாலை மறியல்
இதனால் இப்பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், விரக்தி அடைந்த கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு காலிக்குடங்களுடன் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் கழுவந்தோண்டி பஸ் நிறுத்தத்திற்கு அருகில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டனர்.


Next Story