தேரோடும் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தஞ்சை நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேரோடும் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் பொக்லின் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேரோடும் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் பொக்லின் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டன.
தஞ்சை பெரியகோவில்
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதன் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டமும் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தேரோட்டம் நடைபெற வில்லை.
அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி நடைபெறுகிறது. தேர் தஞ்சை மேலவீதியில் இருந்து தொடங்கி 4 வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடையும்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதற்காக தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. தஞ்சை மேலவீதி மற்றும் தெற்கு வீதிகளில் மழைநீர் வடிகால்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு மழைநீர் வடிகால் கட்டும் பணியும், சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வடக்கு வாசல் பகுதியிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த 3 வீதிகளும் மாநகராட்சிக்கு சொந்தமானது ஆகும். கீழராஜவீதி, தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது ஆகும். இதையடுத்து கீழராஜவீதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. சாலையில் மேற்குபகுதியில் மழைநீர் வடிகால் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
பொக்லின் எந்திரம்
தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரேணுகோபால் ஆகியோர் மேற்பார்வையில் உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
மேலும் மற்ற பகுதியில் உள்ள கடைகளின் முன்பு ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த கொட்டகைகள் அகற்றப்பட்டன. மேலும் கடைகளின் முன்பு போடப்பட்டு இருந்த படிக்கட்டுகள், ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த சுவர்களையும் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story