மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 24 March 2022 2:08 AM IST (Updated: 24 March 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார். அதனால் அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார். அதனால் அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 
மின்சாரம் தாக்கி சாவு 
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கீழப்புதகிரி கிராமத்தை சேர்ந்தவர்   கலையரசன் (வயது30). இவர் திருக்காட்டுப்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருவதால், சாலை ஓரத்தில் இருக்கும் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருக்காட்டுப்பள்ளி கூடணாணல் சாலை ஓரத்தில் இருந்த பழைய மின்மாற்றியில் ஏறி கலையரசன் வேலைபார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கலையரசன் தூக்கிவீசப்பட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 
திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த  டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
சாலைமறியல் 
இதனால் ஆத்திரமடைந்த கலையரசனின் உறவினர்கள் கலையரசன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும், மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என வலியுறுத்தி திருக்காட்டுப்பள்ளி பஸ்நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் மின்சார வாரிய அதிகாரி பாலமுருகன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கலையரசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story