முருகப்பெருமானுக்கு சரவண பொய்கையில் தீர்த்த உற்சவம்
முருகப்பெருமானுக்கு சரவண பொய்கையில் தீர்த்த உற்சவம்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனிப் பெருவிழா நேற்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெற்றது.
பங்குனி பெருவிழா
தமிழ் கடவுள் முருகப் பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாள் பங்குனிப் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனிப் பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி கைப்பாரமும், 18-ந் தேதி பங்குனி உத்திரமும், 20-ந்தேதி பட்டாபிஷேகமும், 21-ந்தேதி திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடந்தது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று தீர்த்த உற்சவம் நடந்தது
யாகசாலை பூஜை
தீர்த்த உற்சவத்தையொட்டி நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, விநாயகர், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளினர். அங்கு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கொண்டு சுவாமி, அம்பாளுக்கு உச்சிகால சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதனையடுத்து மதியம் 1 மணியளவில் மேளதாளங்கள் முழங்க தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையும், மூஞ்சுறு வாகனத்தில் விநாயகரும், பல்லக்கில் அஸ்தரதேவர் எழுந்தருளி சரவணப்பொய்கைக்கு சென்றனர்.
இதனையடுத்து சரவணப் பொய்கை புனித நீரில் அஸ்திரதேவருக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சரவண பொய்கை வளாகத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவில் தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலாவந்து உற்சவர் சன்னதிக்கு சென்றனர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக திருவிழாவின் நிறைவாக கொடியிறக்கப்பட்டது.
Related Tags :
Next Story